அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் விவாதமாகி அதிமுக தற்பொழுது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் அண்மையில் பொதுக்குழு செல்லும் எனவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெற்றிகரமாக அமையாத நிலையும் தற்போது உள்ளது.
இதனிடையே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. எதிர்தரப்பினர் விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கை மார்ச் 17க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.