
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி விசாரணைக்காகத் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று (09.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது. அதே சமயம் ஜாமீன் வழக்கில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது” எனத் தெரிவித்துள்ளார்.