கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சக்தி விளாகம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(45). விவசாயியான இவரும் இவரது நண்பரான ஊரின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் எதிரே ஒன்பது மணிக்கு பேசிக்கொண்டிருந்தனர். ஏற்கனவே ராஜேந்திரனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ஸ்ரீதர் மற்றும் மகாராசன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே நிலம் சம்பந்தமா பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேந்திரனை கொலை செய்வதற்கு பரமசிவம் அவரது மகன் மற்றும் மகாராசன் ஆகியோர் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று இரவு ராமதாஸ் உட்பட மூவர் காளி கோயில் எதிரில் பேசிக்கொண்டிருந்தை பார்த்த பரமசிவம் மகன் ஸ்ரீதர் தங்களுக்கு சொந்தமான விவசாய டிராக்டரை வேகமாக ஓட்டிவந்து ராஜேந்திரன் மீது குறிவைத்து அவர் மீது மோதுவதற்கு சென்றுள்ளார். இதில் ராஜேந்திரனும் அவரது நண்பரும் லாவகமாக துள்ளிக் குதித்து தப்பி விட்டனர். ராமதாஸ் மீது டிராக்டரை விட்டு மோதி உள்ளார் ஸ்ரீதர். ராமதாஸ் நிலைதடுமாறி கீழே விழுந்ததும் மீண்டும் டிராக்டரை பின்னுக்கு எடுத்துச் சென்று வேகமாக முன்பக்கமாக ஓட்டி வந்து ராமதாஸ் மீது மூன்று முறை ஏற்றி படுகொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராமதாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திற்கு தெரிவிக்கபட்டது.
தகவல் அறிந்த உடனே சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பரமசிவம் அவரது மகன் ஸ்ரீதர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான மகாராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான பரமசிவன் ஸ்ரீதர் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இறந்துபோன ராமதாசுக்கு மனைவி ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.