
தேனி மாவட்டம் அல்லிக்குளம் கிராமத்தில் இருந்து முத்துக்குமார் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 5 பேர் சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே ஆவட்டி கிராமத்திற்கு அடுத்துள்ள கல்லூர் ஓடை பாலத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக,ஏற்பட்ட விபத்தில், பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி தலைக்கீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார் விபத்துக்குள்ளானது.
கார் விபத்துக்குள்ளான போது, காரில் இருந்து 55 வயது மிக்க பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பற்றி எரிந்தது. இதில் கார் ஓட்டுனர் சுப்பிரமணியன் வெளியே வர முடியாமல், தீயில் கருகி உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த முத்துக்குமார் (வயது 40) மற்றும் அவரது மனைவி செல்வராணி (வயது 35), இவர்களது 8 வயது மகனான ஆத்விக்கை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் முத்துக்குமாரின் மனைவி செல்வராணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் முத்துக்குமார் மற்றும் அவரது மகனான ஆத்விக் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து ராமநத்தம் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்கள் எங்கு சென்றார்கள்? விபத்து எவ்வாறு நடந்தது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.