கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அச்சமயத்தில் (அதிகாலை 3 மணியளவில்) அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தை அசோக்குமாரும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (28.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாகத் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் தாக்கல் செய்யத் தமிழக அரசு தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். அதை விரைவு நீதிமன்றம் பரிசீலிக்கும்.
அதற்கான நடவடிக்கைய தமிழக அரசு எடுக்கும். மேலும் 12 மாணவிகளுக்கும் பல்நோக்கு விசாரணைக்குழு மூலம் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிவராமனின் தந்தை மதுபோதையில் விழுந்து இறக்கவில்லை. அவர் சர்க்கரை நோயால் வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கையைச் செப்டம்பர் 4ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். உயிரிழந்த சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.