Skip to main content

பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த தடை விதிக்கக்கோரி மேலும் ஒரு மனு தாக்கல்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018


 

application form 400.jpg


பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பொறியியல் சேர்க்கையை ஆன்லைனில் மட்டும் நடத்த தடை விதிக்க கோரி வழக்கறிஞர் பொன்பாண்டி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் " பொறியியல் மாணவர்  நடப்பாண்டுக்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, உயர் கல்வித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

அதன்படி, 2018-19 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விதியை மாற்றி பல்கலைகழகத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, விண்ணபிக்கும் ஆப்லைன் முறையையும் அனுமதிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்துகொள்ள கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கற்ற மாணவர்களுக்கு போதுமான கணிணி மற்றும் இணையதள தெளிவு இல்லாமல் இருப்பார்கள் என்பதால், பொறியியல் படிப்பை இழக்கவும் நேரிடும். எனவே இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆப்லைனிலும் விண்ணப்பங்களை பெற அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

 

ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்ற கடந்த ஆண்டு அரசாணை ரத்துசெய்யவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும்".இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த வழக்கு நாளை  விசாரணைக்கு வரவுள்ளது. இதே போல் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்