கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்து அவர்கள் சொல்வது போல நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேட்டி அளித்தார்.
நிவாரணம் :
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், திருநா@ர் மற்றும் பல கிராமங்களை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பல இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவருடன் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் குணசேகரன், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் துரைஅரசன் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் சென்றனர்.
தொற்று நோய் பாதிப்பு :
பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட்ட பிறகு கீரமங்கலத்தில் ஜ.கே.மணி செய்தியாளர்களிடம் பேசியதாவது.. இதுவரை புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மின்சாரமும், குடிதண்ணீரும் சரிவர கிடைக்கவில்லை. பல கிராமங்களில் நோய்கள் பரவி வருகிறது. தென்னை, பலா, வாழை, நெல் என்று அனைத்தும் அழிந்து விவசாயிகள் வாழ்வாதரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், தீவிரமாக நடந்து வருவதாகவும் தமிழக அரசும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். ஆனால் பல கிராமங்களில் கணக்கெடுக்க எந்த அதிகாரியும் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பவில்லை.
பேரிடர் மாவட்டங்கள் :
புயல் பாதித்த பகுதிகளை பிரதர் வந்து பார்க்க வேண்டும். மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு அதிகமான நிவாரணம் வழங்க வேண்டும். இதுவரை 4 புயல் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு கேட்ட நிவாரணத்தில் 5 சதவீதம் கூட மத்திய அரசு வழங்கவில்லை. அதேபோல கஜா புயல் பாதிப்பிலும் பாரபட்சம் காட்டாமல் அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.
8 வழிச்சாலையில் பாதிக்கப்படும் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க முன்வந்த அரசு கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தென்னை மரத்துக்கு ரூ. ஆயிரத்தி நூறு வழங்குவதாக சொல்லி இருப்பது அரசு விவசாயிகளுக்கிடையே பாரபட்சம் பார்ப்பதை தெளிவாக காட்டுகிறது. புயல் பாதிக்கப்பட்ட பிறகு அரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மேலும் கொத்தமங்கலத்தில் அரசு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளனர். அவர்களை நிபந்தனையின்றி பெயர் நீக்கம் செய்ய வேண்டும். அந்த வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் வலி ஏற்படுத்துவது போல உள்ளது இந்த வழக்கு. வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வாளர்களை வைத்து ஆய்வு செய்து அவர்கள் சொல்லும் தொகையை மரங்களுக்கும், பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.