பாபர் மசூதி இடம் விவகாரம் தொடர்பான வழக்கில், பிரச்சனைக்குரிய அந்த பகுதியில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமிய மக்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கோபத்தில் உள்ளன என்று மத்திய உளவுத்துறை, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், அந்நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமலிருக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் 9 சாலைகளிலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஒவ்வொரு சாலையிலும் நின்று வெளிமாவட்ட வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி, ஓட்டுநர் எண் மற்றும் வாகன உரிமையாளர் எண்ணை பெற்றுக்கொண்ட பின்பே வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கின்றன.