ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் இன்றைக்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. காதலிக்க மறுத்ததால் மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கிறார். விழுப்புரத்தில் 14 வயது பெண் பாலியலுக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. செல்போன்களில் ஆபாசம் படம் பார்த்து இது போன்ற நடந்து கொண்டதாக ஒருவர் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
குழந்தைகளுக்கு செல்போன் யாரும் வாங்கிக்கொடுக்காதீர்கள். இணையதள வசதி செய்து கொடுக்காதீர்கள். நம்முடைய குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் என்றால் இதை செய்யாதீர்கள். செல்போன் வாங்கிக்கொடுப்பதை பெருமையாக கருதாதீர்கள் என கூறினார்.
மேலும் பேசிய அவர், காவிரி பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்களை டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வழங்குவது என்று முடிவு செய்தோம். தமிழக அரசு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளது. ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. 8 கோடி தமிழர்களை அவர் உதாசினப்படுத்துகிறார் என கூறினார்.