கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம் அருகே வெள்ளாற்றில் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் முன்பு தினமும் 189 மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 239 மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் மணல்குவாரி விதிகளை மீறி கரையோரம் உள்ள பட்டா நிலத்தில் சிலர் மணல் அள்ளினர். அதை தட்டிக்கேட்ட நில உரிமையாளர் மதியழகன் என்பவரிடம் சிலர் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு அனுமதியின்றி பட்டா நிலத்தில் மணல் அள்ளிய மாட்டுவண்டிகளை சிறைப்பிடித்தனர்.
ஆற்றில் இருந்த மணல் பெருமளவு அள்ளப்பட்டு விட்டதால், ஆற்றோரத்தில் உள்ள பட்டா நிலத்தில் குழி பறித்து மணல் அள்ளுவதாகவும், அதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் எனவும், இதன் காரணமாக வெள்ளாற்று கரையோரம் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமலும், சுற்றியுள்ள 64 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டாலும் அவதியடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அதுப்பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து மணல் குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தவும், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.