பிரதமரின் தமிழக வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிலவற்றிற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை(8.4.2023) சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார். முதலில் இந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மடத்தில் நடப்பதாக இருந்த நிலையில் தற்போது, விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையால் நகரின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது. மேலும் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி, மாலை விமானம் மூலம் மைசூர் செல்கிறார். பின்பு மறுநாள் காலை 9.30 மணிக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார். பின்பு படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு, அவற்றிற்கு உணவு வழங்குகிறார். தொடர்ந்து சில அரசு நிகழ்வில் கலந்துகொண்டு பின் மசினகுடி வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் 9 ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த இரண்டு நாட்களும் நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க காவல்துறை தடைவிதித்துள்ளது. இதனிடையே பிரதமரின் வருகையையொட்டி அவரது சிறப்பு பாதுகாப்பு குழுவினர் சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.