
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது. பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து அவை தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

ஆளுநர் வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேரவையை வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேசிய கீதம் என்ன இந்த நாட்டின் பிரிவினை கோஷமா? பேரவை மரபில் தேசிய கீதத்திற்கு இடமில்லையா? எத்தனையோ மரபுகளை பேரவை தலைவர் எத்தனையோ முறை மீறி இருக்கிறார். தேசிய கீதம் பாடும் போது மட்டும் மரபு வந்துவிடுமா? திட்டமிட்டு மாநில அரசு தங்களுடைய பிரிவினைவாத கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேசிய கீதம் இந்த நாட்டின் பிரிவினைவாதமா? அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? தேசிய கீதம் என்பது இந்த நாட்டின் மரியாதை. தேசிய கீதம் பாடுவதில் இவர்களுக்கு என்னெங்க பிரச்சனை. தமிழ்நாட்டில் இருக்கிற எம்எல்ஏக்களுக்கெல்லாம் தேசிய கீதம் பாடத் தெரியாதா? வேண்டுமென்றே தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே இன்று ஆளும் கட்சியின் ஆதரவோடு பேரவை தலைவர் இதுபோன்ற நாடகத்தை நடத்தி இருக்கிறார்'' என்றார்.
செய்தியாளர்கள் தொடர்ந்து 'முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு ஆளுநர் உரைக்கு பின்னர் தேசிய கீதம் பாடுவதாக சொன்னார்களே' என்ற கேள்விக்கு, ''கவர்னர் தேசிய கீதம் இசைக்க சொன்னார். தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனச் சொல்லும் பொழுது இவர்களுக்கு என்ன பிரச்சனை?'' என்று சொல்லிவிட்டு வானதி சீனிவாசன் அங்கிருந்து கிளம்பினார்.