தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இது வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக்கூடும். எனவே கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.05.2024) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்துள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு கனமழை பொழிந்து வரும் நிலையில் இன்றும் மாநகர் மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் பலத்த மழை பொழிந்தது. குறிப்பாக சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து தாசநாயக்கன்பட்டி வரை செல்லும் சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி வெள்ளக்காடு போல காட்சி அளித்தது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வெள்ள நீர் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகிலேயே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் முக்கியச் சாலை மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக துணை சாலையில் வாகனங்கள் சென்று வரும் நிலையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் தேக்கத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.