திருச்சி மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக திருச்சியில் உள்ள அரியாற்றின் கரையோரத்தில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் தமிழ்நாடு மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (6ஆம் தேதி) அதிகாலை மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக மணப்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஏற்கனவே ஒருமாத காலமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அனைத்து ஏரிகளும் குளங்களும் நிரம்பி பல இடங்களில் உடைப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணப்பாறையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதன் காரணமாக திருச்சியில் உள்ள அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியாக அரியாற்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மருதண்டாகுறிச்சி, லிங்கா நகர், செல்வம் நகர் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.