Skip to main content

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை!

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
Heavy rain with thunder and lightning in Chennai

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதோடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டது. மேலும் சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டன. அதாவது தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டன. அதன்படி வரும் 21ஆம் தேதி இந்த கலந்தாய்வு நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அதன்படி சென்னை மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், திருவான்மியூர், அடையார், ஆவடி, அம்பத்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், ஐசிஎப், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், மேற்கு மாம்பழம், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. 

சார்ந்த செய்திகள்