உலக அளவில் மருத்துவம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் புதிது புதிதாக நோய் கிருமிகள் உருவாகி மனித குலத்திற்கு சவால் விட்டு வருகிறது. அப்படித்தான் இந்த கொரோனா வைரஸ்சும் சீனாவில் தொடங்கி இன்று உலக நாடுகள் பலவற்றை அச்சுருத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் சீனாவில் பரிதாபமாக இறந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் இப்போதும் அபாய கட்டத்தில் உள்ளார்கள். சீனாவுக்கு படிக்க, தொழில் நியமித்தமாக சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்தால் கொரோனாவுடன் வந்து விட்டார்களோ என்ற பீதி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சென்ற ஐந்து ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்கலைக்கழகமான சின்ஜியங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு அந்த மாணவர் திரும்பினார். அப்போது அவருக்கு காய்சல் அறிகுறி இல்லை. தனது வீட்டில் இருந்து வந்த அவருக்கு திடீரென சளி, காய்ச்சல் அதிகமானது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டது.
சந்தேகத்தின்பேரில் அவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா வைரஸ் தனி செல்லுக்கு அனுப்பியதோடு, அந்த சோதனை முடிவு தெரியும் வரை அவர் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் இருக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. அவரும் சில நாட்கள் தனி வார்டில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பீதியடைந்த அந்த மாணவன் வீட்டிற்கு சென்ற மருத்துவர்களிடம் எனக்கு எந்த வைரசும் தொற்றவில்லை. நான் நலமாக உள்ளேன் மருத்துவமனை தனி வார்டில் இருப்பது ஜெயில் போல இருக்கிறது என கூறியிருக்கிறார். பிறகு மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பிய உங்களின் ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும்வரை உங்கள் வீட்டிலாவது தனி அறையில் இருப்பது நல்லது என கூறி விட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஒரு நாளைக்கு ஐந்து முறை மருத்துவர்கள் மாஸ்க்கட்டிய படி அந்த மாணவன் வீட்டுக்குச் சென்று விசாரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மாணவனோ எந்த மாஸ்க்கும் கட்டாமல் வீட்டுக்கு வரும் மருத்துவர்களை நலம் விசாரிக்கிறார்.