கோவை சாவடிபுதூர் அருகே ஆற்றின் நடுவே உருவான 30 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆற்று நீர் முழுவதும் நிலத்திற்குள் செல்வதை அப்பகுதி மக்கள் சென்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் சாவடி புதூர் அருகே உருவாகும் உப்புக்கண்டி ஆற்றில் நீர் வரத்துவங்கியது.
சாவடிபுதூர் அருகே உள்ள மலைகளில் உருவாகும் இந்த ஆற்று நீர் நேராக விவசாய நிலங்களை கடந்து வாளையார் அணையை சென்றடையும். இந்நிலையில் இன்று அதிகாலையில் சாவடிபுதூர் வாழப்படுகு என்ற இடத்தில் ஐயாச்சாமி கோவில் அருகே திடிரென சுமார் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகி ஆற்று நீர் முழுவதும் நிலத்திற்குள் செல்கிறது. திடிரென உருவான பள்ளம் மற்றும் ஆற்று நீர் முழுவதும் நிலத்திற்கு அடியே செல்வதை அப்பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து அங்கு வந்த க.க.சாவடி போலிசார் அங்கு எச்சரிக்கை பலகை வைத்து, பள்ளத்தின் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.