Skip to main content
Breaking News
Breaking

கனமழை எதிரொலி; தேர்வுகள் ஒத்திவைப்பு

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
Heavy rain echoes; Postponement of Examinations

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த 2 நாட்களில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை ஒருநாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (நவம்பர் 27ஆம் தேதி) நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கான விற்பனையாளர்கள், மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த 25.11. 2024 முதல் 5.12.2024  வரை நடைபெறுகின்ற  நிலையில் நாளை 27.11.2024 நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு கனமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 27/11/2024 அன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் வருகின்ற 6.12.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்