அக்டோபர் 19 ந்தேதி (இன்று) மதியம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் போளூர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒசூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்
அப்போது தான் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியை யாரோ திருடிக்கொண்டு வேகமாக கிளம்பி போவதை கண்ட ஓட்டுநர் திருடன் திருடன் என கூச்சல் போட்டுள்ளார். அந்த ஹோட்டலில் இருந்த ஒருவரின் இருசக்கரவாகனத்தில் தனது கண்டெய்னர் லாரியை விரட்டி சென்றுள்ளார். கண்டெய்னர் லாரியை ஒருவன் திருடிச்செல்வதை ஹோட்டலில் இருந்தவர்கள் புதுப்பட்டு கிராம மக்களுக்கு சொல்ல அவர்கள் சாலையின் குறுக்கே நின்றனர். வேகமாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி நிறுத்தினர்.
ஓட்டுநர் சீட்டில் இருந்தவனை பார்த்து அக்கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் அதே புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் என தெரிந்து அதிர்ச்சியாகினர்.
சும்மா விளையாட்டுக்கு செய்துட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளான் அந்த இளைஞன். சிலர் புகார் தரவேண்டும் எனச்சொல்ல ஓட்டுநர் அதற்கு உடன்பட்டுள்ளார். செங்கம் போலீஸாருக்கு தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மற்றொரு புறம் சமாதான பேச்சு வார்த்தையும் நடக்கிறது எனக்கூறப்படுகிறது.