தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கருப்பு பூஞ்சை நோய் கண்டறிதல் சம்பந்தமான வெளிப்புற நோயாளிகளின் பிரிவு ஒன்று இப்போது புதிதாக சென்னையில் துவங்கி செயல்பட இருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் இந்த பிரிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான அனைத்து பரிசோதனைகளையும், பல்துறை மருத்துவ வல்லுநர்களையும் ஒரே இடத்தில் திரட்டி விரைவாக சிகிச்சை மேற்கொள்வது என்ற முறையில் தமிழக முதல்வரின் சிறப்பு ஏற்பாடாக இந்த பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த பிரிவில் மருத்துவ வல்லுநர்கள் இடம்பெறுகிறார்கள். குணமடைந்த பிறகு இங்கேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 180 படுக்கைகளும் இந்த மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறது. ஏற்கனவே இதற்காக 13 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாகத் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, அருகில் இருக்கக்கூடிய ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் கூட இதற்கான சிறப்பு வார்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. புதிய முயற்சியாகத் தொடக்க நிலையிலேயே கருப்பு பூஞ்சை நோய் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு மையமாக இது செயல்படத் தொடங்கும்.
தமிழகத்தில் மொத்தம் 518 பேர் இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் குணமாகக் கூடியது என்பதால் மருத்துவர்கள் தீவிரமாக முயற்சிகளைச் செய்து பலரைக் காப்பாற்றி, நோயாளிகள் நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கருப்பு பூஞ்சை நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 4 லட்சத்து 20 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருவதால், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்படும். மாலை சென்னைக்கு வர உள்ள தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.