திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான முரளி. இவருக்குத் திருமணமாகி மனைவி சங்கீதா, 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆம்பூர், உமராபாத், வாணியம்பாடி ஆகிய இடங்களில் கிராமிய மற்றும் நகர காவல் நிலையத்திலும், மதுவிலக்கு அமல் பிரிவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார். தற்போது வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.
நவம்பர் 10 ஆம் தேதி இரவுப் பணி பார்த்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி விடியற்காலை சென்னை டூ பெங்களூரூ நாற்கர சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் இறந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பேருந்துகளில் வந்த 50க்கும் மேற்பட்ட அடிப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிகமாக அடிப்பட்டவர்கள், இறந்தவர்கள் உடைமைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
தலைமைக் காவலர் முரளிக்கு அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அங்கிருந்த சக காவலர்கள் அவரைக் காவல் நிலையத்தில் படுத்து ஓய்வெடுக்கச் செய்துள்ளனர். அவரும் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டு இருந்துள்ளார். ஒருமணி நேரம் கடந்து அவரது மொபைலுக்கு யாரோ கால் செய்துள்ளனர். அப்போது அது ரிங் ஆனதே தவிர எடுக்கவில்லை. இதனால் சக காவலர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தபோது, எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். அவரின் நாடியை சோதித்தபோது அவர் உயிர் பிரிந்து இறந்து போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கும் அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்துள்ளனர். அவரது உடலை அரசு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தினை பார்வையிட்ட வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, உயிரிழந்த தலைமைக் காவலர் முரளியின் உடலைப் பார்த்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.