கேரளா அட்டப்பட்டி அமைதி பள்ளத்தாக்கில் நக்சல்சல்கள் தங்கி இருந்ததாக போலீசார் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கேரள போலீசார் கூறினார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மணிவாசகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்தி என்கிற கண்ணன் என்பதும் அடையாளம் காணப்பட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் தகவல் கொடுத்து அடையாளம் பார்க்க அழைக்கப்பட்டாலும் உறவினர்கள் அடையாளம் பார்க்கும் முன்பே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகும் சடலங்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், எனவே சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி சடலங்களைப் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 4 ந் தேதி வரை சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் அண்ணன் முருகேசனிடம் காட்டப்பட்ட சடலத்தைப் பார்த்து அந்த சடலத்தில் கண்கள் இல்லை, முகம் சிதைந்துள்ளது அதனால் இது என் தம்பி தானா என்ற சந்தேகம் எழுகிறது அதனால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்களை காட்டினால் அடையாளம் பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் புகைப்படங்களை முருகேசனிடம் காட்ட விரும்பாத போலீசார் இதற்கு முன்பு கைதானபோது எடுக்கப்பட்ட கைரேகை பதிவுகளை வைத்து சரி பார்த்த பிறகுதான் அது கண்ணன் என்கிற கார்த்திக் உடல் என்பதை உறுதி செய்துவிட்டதாக முருகேசனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மோதல் நடக்கும் போதும் அதன் பிறகும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய கேரளா உயர்நீதிமன்றத்தை உறவினர்கள் நாடிய நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் மேலும் 4 நாட்கள் வரை உடலை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்களுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பிறகே சடலங்களை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கேரள போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.