தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்ககல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக "ரேசன் கடைகளில்" அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கி வருகிறது தமிழக அரசு. இந்த குடும்ப அட்டை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடிப்படை சான்றிதழாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு எளிமையாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnpds.gov.in ஆகும். மேலும் இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) கூகுல் பிளே ஸ்டோரில் "TNEPDS" என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்திற்கு சென்று குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல் , புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , முகவரி மாற்றம் போன்றவை எளிதாக செய்யலாம். இதற்கு எவ்வித கட்டணமும் தமிழக அரசுக்கு செலுத்த தேவையில்லை.
குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1. குடும்ப தலைவரின் ஆதார் அட்டை.
2. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
3. முகவரி சான்று (முகவரி சான்று இல்லையென்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம்)
4.குடும்ப தலைவரின் புகைப்படம்.
5. வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தேவை.
6.நிரந்தர தொலைபேசி எண் தேவை.
இந்த சான்றிதழ் அனைத்தும் "அசல்" சான்றிதழாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை விண்ணப்பிக்க "ஆதார் அட்டை அசல்" முக்கியமானது. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த பின்பு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "Acknowledgement No" வரும். மேலும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு www.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று குடும்ப விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். அதே போல் "குடும்ப அட்டை" க்கு தாசில்தார் ஒப்புதல் வழங்கியவுடன் , பிரிண்டிங் நிலைக்கு செல்லும். அதன் பிறகு சமந்தப்பட்ட நியாய விலை கடைக்காரர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவருக்கு தொலைபேசியில் அழைத்து குடும்ப அட்டையை வழங்கிவிடுவார்.
அப்படியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனில் தமிழக அரசின் இ-சேவை மையத்திற்கு சென்று ரூபாய் 30யை கட்டணமாக செலுத்தி "ஸ்மார்ட் ரேசன் கார்டை" பெற்றுக்கொள்ளலாம். உடன் தொலைபேசியையும் எடுத்த செல்ல வேண்டும். ஏனெனில் குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும்.அதன் மூலம் "LOG IN" செய்து ஸ்மார்ட் ரேசன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டை விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி எண்கள் : 1967 (அல்லது) 1800-425-5901 ஆகும். மேலும் இணையதளத்திலும் இதற்கான "Option" இடம் பெற்றுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காமல் பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தால் புகார் செய்ய இந்த இணையதளத்தில் "Option" உள்ளது. குறுந்தகவல் மூலமும் புகார் அளிக்கலாம். இதற்கான தொலைபேசி எண் : 9980904040.
எனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி குடும்ப அட்டை இல்லாத்தோர்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முந்தைய ஆண்டுகளில் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது நியாய விலை கடையில் பொருட்கள் உள்ளதா? என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது? தமிழக அரசு கிடங்கில் மொத்த இருப்பு பொருட்கள் உள்ளது என்பதை எளிதாக இந்த இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான மொபைல் செயலியும் (Mobile Application) உள்ளது. குடும்ப அட்டை தொடர்பான தகவல்களை பெற பதிவு செய்யப்பட்ட "தொலைபேசி எண்" மிக முக்கியமானது. மேலும் "LOGIN" செய்யும் போது இந்த தொலைபேசி எண்ணை பதிவு செய்து , பிறகு தொலைபேசி எண்ணுக்கு வரும் "OTP"யை பதிவிட்டால் மட்டுமே தங்கள் குடும்ப அட்டை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெறலாம் (அல்லது) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளம் கிராம மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பி. சந்தோஷ் , சேலம்.