இன்று (28-08-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகோபித்த ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் உரையாற்றிய போது பேசுகையில்,
கலைஞரின் மகன் என்று சொல்லிக்கொள்வதை விட “தலைவர் கலைஞரின் தொண்டன்” என்று சொல்லிக் கொள்வதில்தான் மகிழ்ச்சியடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து கொண்டு முற்றிலும் புதிய ஒரு எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும், தமிழினத்தையும் அழைத்துச் செல்ல நான் நினைக்கிறேன்.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய கோட்டை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சிதைக்கும் மத்திய அரசையும் பார்க்கும் போது நமக்கெல்லாம் வேதனை தந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு நிலவும் அரசியல் சமூக சூழ்நிலைகள் சுய மரியாதை கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பெரும் சவாலாக நிலவுகின்றன. கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளெல்லாம் அதிகார பலத்தால் மத வெறியால் அழித்திட மத்திய அரசு முயன்று வருகிறது. நீதித்துறை, கல்வித்துறை மாநிலங்களில் கவர்னர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்தும் மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மாண்பை குலைக்கும் செயல்களாகவே அமைந்து கொண்டிருக்கின்றன.
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையில் துவங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தங்கள் சுயநலம் ஒன்றிற்காகவே தாரை வார்த்து மாநில மக்களின் நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்து, சுயமரியாதையை முழுவதுமாக அடகு வைத்து, இன்னும் அண்ணா பெயரையும் தாங்கிக் கொண்டு தமிழக மக்களின் அனைத்து நலன்களையும் கூறு போட்டு பங்கிட்டு கொள்ளும் பகல் கொள்ளைகளில் அரசு என்ற பெயரால் நிலவிக் கொண்டிருப்பதை இதயத்தில் ரண வலியோடு கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்த சமூக தீமைகளை அகற்றி தமிழகத்தை திருடர்கள் கையிலிருந்து விடுவிப்பது நம்முடைய முதல் கடைமையாக இருந்திட வேண்டும் எனக்கூறினார்.