பூர்வீகமான தொழில் ஒன்று நமது சமகாலத்தில் தனது இறுதி மூச்சை சுவாசித்து கொண்டிருக்கிறது என்றால் அது கைத்தறி தொழில் தான். விசைத்தறி, ஏர்லூம் என விஞ்ஞான வளர்ச்சியில் இயந்திரங்கள் வந்த பிறகு ஒரு மனிதன் தனது முழு உடல் உழைப்பை செலுத்தும் கைத்தறி அப்படியே நசிந்துபோனது. ஆனால், அதை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் உள்ளார்கள்.
பொதுவாக சாதரண நாட்களிலேயே ஊதியம் பெரிதாக இருக்காது. அதுவும் இந்த கரோனா காலத்தில் சொல்லொன்னா துயர்த்தில் இருக்கிறோம் என்கிறார்கள் கைத்தறி நெசவு தொழில் செய்பவர்கள்.
தமிழக அரசு கரோனா கால நிவாரன நிதியாக ஒவ்வொரு கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இன்னமும் தங்களுக்கு அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதி வந்து சேரவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்தபடி கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 உடனடியாக வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். இதில் சென்னிமலை சென்கோப்டெக்ஸ், காளிக்கோப்டெக்ஸ், ஜீவா டெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் நெசவாளர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
"தமிழக அரசு அறிவித்தபடி, நலவாரியத்தில் இருந்து நிதியுதவி பெறாத அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் நிபந்தனையின்றி ரூ.2000 கரோனா கால நிவாரண நிதி வழங்க வேண்டும். நெசவாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதம் மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; ஓய்வூதியத்தை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் தவறாமல் வழங்க வேண்டும்.
சென்னிமலை சென்கோப்டெக்ஸ் நெசவாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நிர்வாகம் அறிவித்துள்ள நிர்வாகக் குழுவை ரத்து செய்து முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட தேர்தல் அதிகாரி சேரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சரக்குகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை ரிபேட் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுள்ள காசு கடனுக்கும், நெசவாளர்கள் பெற்றுள்ள வங்கி கடனுக்கும் கரோனா காலத்திற்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், அடுத்த 15 தினங்களுக்கு பிறகு மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களைத் திரட்டி, ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.