திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-04-2018) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 68 ல் உள்ள ஜெய்பீம் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.29.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையின் புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார். தொடர்ந்து, திரு.வி.க.நகரில் சமுதாய நலக்கூடம் கட்டுமானப் பணியை பார்வையிட்டார். மேலும், பங்காரு தெருவில் உள்ள திரு. இளங்கோவன் அவர்களின் இல்லத்தில் புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனையடுத்து, கென்னடி சதுக்கம் 3வது வடக்கு தெருவில் மறைந்த மோகனரங்கம், தீட்டித்தோட்டம் 4வது தெருவில் மறைந்த குமரேசன் (எ) சிவகுமார், 3வது தெருவில் மறைந்த முகமது ஆசாம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு 2 மடிக்கணிணிகள், மகளிருக்கு 12 தையல் இயந்திரங்கள், ஒருவருக்கு திருமண நிதியுதவி, 3 நபர்களுக்கு தள்ளு வண்டிகள், 2 நபர்களுக்கு மீன்பாடி வண்டிகள் மற்றும் 68 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினார். அதனையடுத்து, வார்டு எண் 65ல் உள்ள செந்தில் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்ததுடன், வீனஸ் நகரில் உள்ள கழக மாவட்ட பிரதிநிதி சூரி இல்லத்தில் புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, கீரப்பாக்கம் ஊராட்சி திமுக கிளைக்கழக துணைச்செயலாளர் எஸ்.ரமேஷ் உடல் நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் , ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
ஸ்டாலின்: கொளத்தூர் தொகுதியில் இன்றைக்கு ரேஷன் கடை திறந்திருக்கிறோம். அதேபோல, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அதுமட்டுமில்லாமல், சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்தினோம்.
செய்தியாளர்: தமிழ்நாடு அரசு லோக்பால் அமைக்காததை நீதிமன்றம் கண்டித்து இருக்கிறதே?
ஸ்டாலின்: தாங்கள் செய்திருக்கும் ஊழல்கள் வெளியாகி விடும் என்ற பயத்தினால் இந்த அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வராமல் இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் லோக்பால் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, சட்டமன்றத்தில் நான் பலமுறை கேள்வியெழுப்பிய போதும், லோக்பால் கொண்டு வருவோம் என்று இதுவரை சொல்லவில்லை. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனியாவது லோக்பால் கொண்டு வந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை நிறைவேற்ற வேண்டும்.
செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலிருந்து திசைதிருப்ப நிர்மலா தேவி விவகாரம் போன்ற பல பிரச்சினைகள் எழுப்பப்படுகிறதா?
ஸ்டாலின்: அப்படியொரு சந்தேகமும் இருக்கிறது. எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவு, கவர்னருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றை எல்லாம் பார்க்கின்றபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இவையெல்லாம் நடப்பதாகவே கருதுகிறேன்.
செய்தியாளர்: 15வது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சர் டெல்லி சென்றிருக்கிறாரே?
ஸ்டாலின்: 15வது நிதி ஆணையத்தின் ஆய்வுக்குழு தொடங்கியபோதே, தென் மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பல மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் இவர்கள் அதுபற்றி கவலைப்படவில்லை. அதுமட்டுமல்ல, அண்மையில் கேரள மாநில முதல்வர் அவர்கள் தென் மாநில முதலமைச்சர்களை எல்லாம் அழைத்து, இதுகுறித்து விவாதிக்க ஒரு கூட்டம் நடத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு செல்லாமல் தமிழ்நாட்டு முதலமைச்சர் புறக்கணித்தார். இதிலிருந்தே, அவருடைய விருப்பம் என்னவென்று வெளிப்படையாக தெரிந்தது. காலம் கடந்து இப்போது சென்று இருக்கும் நிலையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தார்கள் என்று சொல்வது போல, காரியத்தை சாதித்துக் கொண்டு வந்தால் மகிழ்ச்சியடைவேன்.
செய்தியாளர்: கவர்னரை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடருமா?
ஸ்டாலின்: மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அவரை திரும்பப்பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். அதற்காக எங்களுடைய போராட்டம் தொடரும்.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறதே?
ஸ்டாலின்: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் எந்தளவுக்கு தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள்? இதுகுறித்து எல்லாம் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், சிபிசிஐடி விசாரணையை அரசு அறிவித்துள்ளது. அறிவித்த இரண்டு நாட்களுக்குள், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை அவசர அவசரமான மாற்றியிருக்கின்றனர். எங்களுக்கு வந்திருக்கும் செய்திகளின்படி, அவர் மிகுந்த நேர்மையானவர், உண்மையை கண்டறிந்து வெளிப்படுத்தக்கூடிய திறமையான போலீஸ் அதிகாரி, என்று அறிகிறோம். எனவே, உண்மைகள் வெளியாகிவிடுமே என்ற அச்சத்திலும், சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியிலும் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் சட்டம் – ஒழுங்கு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் ஏன் கவலைப்படுகிறார்கள்?
செய்தியாளர்: நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் அமைத்து இன்று தொடங்கும் விசாரணை ஆணையத்தில் நியாயம் கிடைக்குமா?
ஸ்டாலின்: நிச்சயமாக கிடைக்காது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களே விசாரணைக்கு உத்திரவிடுவது வேடிக்கையானது. எனவே, உண்மையான விசாரணை நடந்து, நியாயம் கிடைக்க வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.