
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று முதன் முறையாக முழு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஏற்கனவே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் தொடர்ந்து பல கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கமாக அனைத்து துறைகளில் இருந்தும் நடப்பாண்டிற்கான நிதித் தேவைகள் என்னென்ன, என்னென்ன திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன உள்ளிட்ட தகவல்கள் நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் முதலில் பட்ஜெட் வரைவு தயாரிக்கப்படும்.
பட்ஜெட் வரைவு முதலமைச்சர் அலுவலகத்திற்கும், அனைத்து துறை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னர், முதலமைச்சர் அலுவலகமும், பிற அலுவலகங்களும் ஆய்வு செய்து தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பர்.
மீண்டும் அந்த வரைவு நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்றப்படி மாற்றங்கள் செய்யப்பட்டு, பட்ஜெட் இறுதி வடிவம் தரப்பட்டு மீண்டும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இறுதியானவுடன் நிதியமைச்சர் கைகளாலேயே பட்ஜெட்டை எழுத தொடங்குவார் (அல்லது) நிதியமைச்சர் சொல்ல சொல்ல அதிகாரிகள் எழுதுவர்.
இந்த காலகட்டத்தில் தான் பட்ஜெட்டில் அரசியல் ரீதியான தகவல்கள் நிதியமைச்சரால் சேர்க்கப்படும். பட்ஜெட்டின் தமிழ் வடிவம் கைப்பட எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிட அனுப்பி வைக்கப்படும்.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.க. எத்தகைய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இது பி.டி.ஆர். பட்ஜெட் இல்லை; முதலமைச்சரின் பட்ஜெட் என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டிற்கு மாற்றாக, ஓர் அரசியல்வாதி எழுதிய பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 1996- ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞரே பட்ஜெட்டை கைப்பட எழுதியிருக்கிறார். மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, ப.சிதம்பரம் தன் கைப்பட பட்ஜெட்டை எழுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.