வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலர் மீட்கப்பட்டனர். கன்னியாகுமரியில் 10 நிவாரண முகாம்களில் 337 பேர் தங்கவைக்கப்பட்டு, உணவுப்பொருள் தரப்பட்டுவருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றைய (17.10.2021) ஆலோசனையில் கூறியிருந்தார். கன்னியாகுமரி மூஞ்சிறையில் 200 குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை பொழிவு நின்றபோதிலும் வெள்ளம் வடியவில்லை. கோதமடக்கு பகுதியில் கோதையாற்றில் 6 வயது மதிக்கத்தக்க யானையின் சடலம் மிதந்துவந்தது. யானையின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையாற்றில் 11 சென்டி மீட்டர் மழையும், கல்லாறு, வால்பாறை, சின்கோனாவில் தலா 10 சென்டி மீட்டர் மழையும், பந்தலூர் - 8, தேவாலா - 6, பெரியாறு - 5, வாலாஜா - 4, பேராவூரணி, காவேரிப்பாக்கத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.