இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் (திருப்பூரில் நொய்யல் ஆற்றில் சாய கழிவு, கெமிக்கல் கழிவுகள் நுரை நுரையாய் வெளியேறியதை திருப்பூர், கோவை மக்களெல்லாம் சோப்பு போட்டு குளித்ததால் வந்த நுரை தான் இது என்று சொல்லி விஞ்ஞானி 2 வாக பிரபலமானவர்) தனது வாக்கை செலுத்த வேலம்பாளையம் என்ற கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார்.
ஏற்கனவே ஒட்டுப் போட்டுவிட்டு வெளியே சிலர் நின்று கொண்டிருந்தனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தொடங்கிய கருப்பண்ணன் பின்னால் திரும்பிப் பார்த்த போது யாரும் இல்லாததால் எப்பா போட்டோ காரங்களா இருங்க இருங்க ஓட்டு போட போனா வரிசையில் நின்று தான் போகணும் நம்ம சி.எம் முதல் எல்லா அமைச்சர்களும் வரிசையில்தான் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்காங்க அதனால இருங்க வர்றேன் எனக்கூறிவிட்டு அப்பகுதிகளில் நின்று கொண்டிருந்தவர்களையெல்லாம் வாங்க வாங்க வாங்க வந்து எனக்கு பொறத்தாலே (பின்னால்) நில்லுங்க போட்டோ பிடிக்கிறாங்க, போட்டோ எடுத்துட்டு அப்புறமா போயிடுங்க என்று கூற...
அங்கிருந்தவர்கள் வந்து வரிசை கட்டினார்கள் பிறகு வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்தார் அமைச்சர் கருப்பணன்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசத் தொடங்கினார்,
இப்போ நம்ம தமிழ்நாட்டுல நம்ம கட்சி ஆட்சி நடக்குது. இது நல்ல ஆட்சி அதனாலதான் இந்த பஞ்சாயத்து தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.கவும் எங்க கூட்டணியும் தொண்ணூறு சதவீதம் வெற்றி உறுதியா பெறுவோம். இந்த மூணு வருஷமா பஞ்சாயத்து தேர்தல் வராதற்கு காரணம் தி.மு.க. ஸ்டாலின் தாங்க. அவரு எப்ப பாத்தாலும் நல்லா நடக்கிற ஆட்சிய கொறை சொல்லீட்டே இருக்காரு. நீங்க வேனா பாருங்க அடுத்த வருடம் 2021 ல் வர்ற சட்டசபை தேர்தலிலும் நம்ம கட்சிதான் வெற்றி பெறும் எடப்பாடியார் தான் முதலமைச்சர். என்றவரிடம் அப்போ அடுத்து வர்ற சட்டசபை தேர்தல்லே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிங்களாண்ணா? என்று நிருபர் ஒருவர் கேட்க...
நிச்சயமா எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் அவருதான் இனி எப்புவமே முதலமைச்சர். என கூறி விட்டு போனார் கருப்பணன்.
அங்கிருந்த அ.தி.மு.க.வினர் "இப்படி தைரியமா ஏதாவது தென் மாவட்ட அமைச்சர் யாராவது சொல்ல முடியுங்கலா? இன்னார் தான் முதல்வர் வேட்பாளர்னு யாருமே சொல்லலே ஆனா கொங்குனா என்னன்னு தைரியத்தை நிருபிச்சுட்டாரு கருப்பணன் என்றனர்.
சரி சி.எம் எடப்பாடி யார் இந்த கருப்பனனுக்கு என்ன உறவு முறைங்க என்று கேட்டோம் ரொம்ப நெருங்கிய உறவுங்க. சம்பந்தி முறையாகிறார். அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் மனைவியின் தங்கை. மனைவியின் தங்கை மகளைத் தான் கருப்பணன் மருமகளாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆக எடப்பாடியும் கருப்பணனும் சம்பந்தி இந்த உறவால் தானே கருப்பணன் இன்னும் அமைச்சராக இருக்கிறார் என்றனர்.