தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குற்றங்களைக் குறைக்கவும், தமிழகத்தில் சட்ட ஒழுங்குகளைக் காக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறை சார்பில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவைத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாகத் தமிழக காவல் பிரிவில் டிரோன் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணுணர்வு திறன் கொண்ட டிரோன்கள் காவல் காட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு பிரிவு உடன் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். டிரோன்களை சுமார் 5 கி.மீ. வரையிலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3.6 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவின் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறிதல், ஆட்கள் நுழைய முடியாத இடங்கள், மக்கள் நெரிசலான பகுதிகள், பண்டிகை காலங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.