கீரமங்கலம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாரிமுத்து, வள்ளிநாயகி ஆகியோர் தலைமையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் முன்னிலையில் மாணவிகளின் நடனம், பாடல், ஆசிரியையின் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து மகளிர் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகளுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர். ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லி பரிசுகள் வழங்குவதும் வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களை இனிப்பு, பூ கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு சிறப்பு தினங்களையும் சிறப்பாக கொண்டாடும் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் தினத்தையும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். குழந்தைகள் தினத்தில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 900 மாணவிகளுக்கும் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் செலவு செய்து சைவ பிரியாணி தயாரித்து மதியம் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைத்து மாணவிகளையும் பள்ளி வளாகத்தில் அமர வைத்து ஒரே நேரத்தில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர்.
இது குறித்து மாணவிகள் கூறும் போது, “நாங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துவிட்டால் எங்கள் ஆசிரியர்கள் எங்களை பெற்றோர்களைப் போல கவனித்துக் கொள்வார்கள். இன்று எங்கள் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளாக நினைத்து எங்களை வரவேற்று மதியம் சொந்த செலவில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இந்த பள்ளிக்கு சிறந்த பெயரை வாங்கிக் கொடுப்போம்” என்றனர். இதே போல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிக்கன் குழம்பு முட்டையுடன் அசைவ உணவு வழங்கி மாணவர்களை மகிழ்வித்தனர்.