Skip to main content

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; ஆளுநர் மாளிகை விளக்கம்!

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
Governor's House explanation on The issue of Tamil Thai greetings

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மாதம் கொண்டாட்டங்களின்  நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். 

இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகள் மீது ஆளுநருக்கு மிகுந்த மரியாதை உண்டு. டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதை தவிர வேறு எந்த பங்கும் ஆளுநருக்கு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும் குழுவினரே, ‘திராவிட’ வரிகளை தவறவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்