![Governor of Tamil Nadu is on an urgent trip to Delhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/zhLVFQeukRWSh6MgcF_BuPY-rJQq0TCAyvsizoFMvqU/1667449618/sites/default/files/inline-images/189_8.jpg)
தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பொது மேடைகளில் தமிழக ஆளுநர் பேசும் அரசியல் மற்றும் ஏனைய பொதுக்கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஜி.யு.போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும் ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இதற்கு தமிழக அரசியல் களத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
மேலும் "தமிழக ஆளுநர் ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என எதைப் பற்றி பேசினாலும் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக தலைமையை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால் ஆளுநர் ரவி பதவி விலகி விட்டு இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லட்டும்" என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க இருக்கிறோம். அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் நாளைக்குள் அறிவாலயம் வந்து ஆளுநர் தொடர்பான மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்" என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கையெழுத்து மனு தொடர்பாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் இருக்கும் ஆர்.என்.ரவி, இங்கு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார். இவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. பாஜகவின் ஊதுகுழலைப் போல செயல்படுகிறார். எனவே, இவரை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்புகிறோம்” எனவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரப் பயணமாக இன்று டெல்லி செல்ல இருக்கிறார். இன்று காலை 10.50க்கு விமானம் மூலம் டெல்லி புறப்படும் தமிழக ஆளுநர் நாளை இரவு 8.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்புகிறார். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்கானப் பயணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.