“எனது குருவான ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து, அவர் தூங்கும் போது கால்களை அமுக்கி சேவை செய்து கல்வி கற்று வந்தேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் அரங்கில் ஆளுநரின் எண்ணித்துணிக பகுதி 9 என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருந்து பெற்ற 24 பேருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பள்ளி ஆசிரியர்களுடன் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் 8 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வேன் . என்னுடைய குருவான ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து, அவர் தூங்கும் போது கால் அமுக்கி சேவை செய்து கல்வி கற்றேன். அது நமது பாரம்பரியம்; இது பல ஆயிரம் ஆண்டுகாலமாக இருந்து வந்தது. எல்லாரும் காலகாலமாக ஆசிரியர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்; ஆனால் மரபுப்படி அவர்களை குரு என்றுதான் அழைக்க வேண்டும். மதிப்பெண்கள் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின் கடமை அல்ல; மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் பொறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வதில் ஆசிரியர்களுக்குப் பங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்” என்றார்.