அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் தேசிய மாநாடு வருகிற 23, 24, 25 ஆகிய தினங்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பேரமைப்பின் நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன மத்திய அரசு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் இந்தியாவில் மறைமுகமாக பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து இந்தியாவின் சில்லறை வணிக்கத்தை கைப்பற்றி வருகிறது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் வணிகர்களை பாதிக்கின்ற சட்டவிதிகளில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தில் 20 சதவீதம், 18 சதவீதம் வரியை முழுமையாக அகற்றி அதிகபட்சம் 5 சதவீதம், 12 சத வரியை மட்டுமே அமல்படுத்த வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி படிவங்கள் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும்.
இ-வே பில்லுக்கான குறைந்தபட்ச தூரம் 20 கிலோ மீட்டர் என நிர்ணயிக்க வேண்டும். பொருட்களின் உச்சவரம்பு மதிப்புத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பாலும் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையினால் கடந்த 6 ஆண்டுகளில் 1 லட்சம் வியாபாரிகள் தாங்கள் செய்துவந்த தொழிலை கைவிட்டு, கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வியாபாரிகள் தொழிலை கைவிடக்கூடிய சூழல் ஏற்படும்.
மத்திய அரசு தொடர்ந்து வியாபாரிகளை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி போன்றவற்றை கொண்டு நசுக்கி வருகிறது. வியாபாரிகள் நினைத்தால், அவர்களை நசுக்குவது தொடர்ந்தால் 2019-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு கூறினார்.