பிளஸ்2 பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில் 90.64 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் நடந்தது. சேலம் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளில் இருந்தும் 18,197 மாணவர்கள், 21,025 மாணவிகள் என மொத்தம் 39,222 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இந்தாண்டு முன்கூட்டியே வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 16,132 மாணவர்களும், 19,417 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.64 சதவீதம் ஆகும்.
இவர்களில் மாணவர்கள் 88.65 சதவீதமும், மாணவிகள் 92.35 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் கூடுதலாக 3.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் 91.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் 0.88 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல் அரசுப்பள்ளிகள் அளவில் 86.53 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், தற்போது 85.29 சதவீதமாக சரிந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 52 மாணவர்களும், 11 ஆயிரத்து 675 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 727 பேர் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 94.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் இம்மாவட்டம் தமிழக அளவில் 5ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் 89.62 சதவீதம் பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86.79 சதவீதம் பேரும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.