Skip to main content

'தமிழ்நாடுதான்...' - உரையில் ஒப்புக்கொண்ட ஆளுநர்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

nn

 

இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

 

அப்பொழுது சில சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டனர்.அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும், தவாக கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

 

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர், ''போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்துறையின் தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 149 சமத்துவபுரங்களைப் புதுப்பிக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குடிநீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும்'' என்றார். ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை ‘தமிழ்நாடு தமிழ்நாடு’ என்று பல இடங்களில் அழுத்தமாக உச்சரித்தார் தமிழ்நாடு ஆளுநர்.

 

 

சார்ந்த செய்திகள்