சூதாட்டம் கிரிமினல் சட்டப்படி குற்றம் என்ற நிலையில், கொலை - தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கக்கூடிய ஆன்-லைன் சூதாட்டத்தை அனுமதிப்பது எப்படி? உடனடியாக தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தின் பேரால்கூட தடை செய்யவேண்டியது அவசர அவசிய கடமையாகும். அரசின் காதுகளும், கண்களும் ஏனோ மூடிக் கிடக்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆன்லைன் சூதாட்டம் - சீட்டாட்டம் (கிரிக்கெட் விளையாட்டில் இந்த சூதாட்டம் பல கோடி ரூபாய் பந்தயமாக வைத்து விளையாடுவதும், பார்ப்பதும் பல கிரிக்கெட் விளையாட்டு வீரர்களே கூட தங்களின் வாய்ப்புகளை அதன் காரணமாக இழப்பதும் கண்கூடு!) நாட்டில் நாளும் கரோனா தொற்றைவிட கொடுமையாகப் பரவி வருகிறது.
ஆன்-லைன் சூதாட்டத்தால் ஏற்படும் அபாயங்கள்!
இந்த ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பொருளை இழந்து, பிறகு கொள்ளை - கொலை நடத்தி, சூதாட பணம் தேட வேண்டும் என்ற வெறியின் உச்சகட்டமாக இறுதியில் தற்கொலை என்றெல்லாம் நம் நாட்டு மக்களில் பல தரப்பட்டவர்கள் - மாணவர்கள், இளைஞர்கள், பணியில் உள்ள காவலர் போன்றவர்கள்கூட இதில் ஈடுபட்டு, அந்த போதையின் உச்சத்திற்கே சென்று தகாத செயல்களில் - கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, தற்கொலை செய்துகொண்டு மாளும் அவலங்கள் அன்றாட ஊடகச் செய்திகளாக உலா வருகின்றன!
உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இதுபற்றி மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இதன் கொடுமையை விளக்கி நீதிமன்றங்களில் அறிவுறுத்தல்களையும்,வேண்டுகோள்களையும் நாளும் விடுத்து வருகின்றனர்.
அண்மையில் புதுவை மாநில முதலமைச்சர் மாண்பமை திரு.நாராயணசாமி அவர்களும்கூட இந்த ஆன்-லைன் சூதாட்டம் - குறிப்பாக சீட்டாட்டம் போன்றவையை உடனடியாகத் தடுக்க தகுந்த சட்டம் இயற்றவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
சூதாட்டம் சட்டப்படி குற்றம்தானே!
சூதாட்டம் (Gambling) என்பது நாட்டில் அமுலில் உள்ள கிரிமினல் சட்டப்படி (இந்தியன் பீனல் கோடு - I.P.C.) குற்றமாகும் என்ற நிலையில், எதைச் செய்தால் சட்டப்படி குற்றமோ, தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றோ, அதை ஆன்-லைனில் நடத்துவதும், அதை ஊடகங்களில் - குறிப்பாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரிதாக விளம்பரப்படுத்துதலும் பெரிய குற்றம் அல்லவா?
விளம்பரம் கொடுப்பவர்களையும், அதனை ஊக்கப்படுத்துபவர் யாராயினும் அது திரைப்பட நடிகர், நடிகையாகவோ அல்லது விளையாட்டு வீரராகவோ - நாடறிந்தவர்கவோ இருப்பது அக்குற்றத்தினைத் தூண்டுவது அல்லவா?
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி வழக்குப் போடும் அரசுகள், எப்படி இந்த ஆன்-லைன் சூதாட்டத்தை - சூதாட்ட, சீட்டாட்ட விளம்பரங்களை அனுமதிக்கின்றன என்பதே நமக்குப் புரியவில்லை!
இதனால் நாட்டில் பெருகிவரும் தற்கொலைகளுக்கும் - திருட்டு, கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை. பொது ஒழுக்கமும் கறையான் அரிப்பதுபோல இதனால் நாசமாகும் விரும்பத்தகாத நிலைதான் தொடருகிறது!
சூதாட்டம் ஆரியக் கலாச்சாரமே!
சூதாட்டம் என்பது ஆரியப் பண்பாட்டின் தீய விளைவுகளில் ஒன்று. மகாபாரத கலாச்சாரத்திலிருந்து பரப்பப்பட்ட மிகப்பெரிய கொடுந்தொற்று.
ஆர்யவர்த்தம் என்ற கானக வெளிபிரதேசம், டில்லி போன்றவற்றை ஆண்ட பாரம்பரியத்திலிருந்து பரப்பப்பட்ட ஒன்று! அதனால் அது திருவள்ளுவரின் திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் தென்னாட்டிற்கும் படையெடுத்ததால்தான் வள்ளுவர் எழுதிய 1330 குறள்பாக்களில் பத்து குறள்கள் ‘சூது’ என்ற தலைப்பில் (பொருட்பாலில்) மிக அருமையாக இந்த மூளையைத் தாக்கும் போதை நோயின் அவலம்பற்றி அழகாக விளக்கி எச்சரிக்கை மணி அடித்தார்!
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று (குறள் 931).
‘‘ஒருவனுக்கு வெல்லும் ஆற்றல் சிறப்பாக இருந்தாலும், அவன் சூதாடுதலை ஒருக்காலும் விரும்பக்கூடாது; ஒரு கால் வென்று அவன் பொருள் பெற்றாலும், அந்தப் பொருள் இரையினால் மறைக்கப்பட்டிருக்கும் தூண்டிலின் இரும்பினை, இரையெனக் கருதி மீனானது விழுங்கி, அதனால் அழிவது போன்று அவனை அழித்துவிடும்‘’ என்பதே இதன் பொருளாகும்.
இது பலப்பல தீய விளைவுகள் உருவாவதற்கு உற்பத்தி ஊற்றாகவும் அமையும் என்பதால் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதே!
சிலர் பொழுது போக்குச் சீட்டாட்டம் என்று தொடங்கி, பிறகு பொழுதெல்லாம் அதற்கே பலியாகும் நிலை ஏற்பட்டு, பொருளை -அறிவை - மரியாதையை - மானத்தை இழந்துவிடும் கொடுமைக்கு ஆளாகி வரும் கசப்பான நடப்புகள் நாள்தோறும் நடந்தாலும், அரசின் காதுகளும், கண்களும் ஏனோ மூடிக் கிடக்கின்றன, புரியவில்லை!
நாம் முன்பே பலமுறை எழுதியதோடு, நமது திராவிடர் கழக இளைஞரணியினர் தனியே அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்!
ஆரிய கலாச்சார தீய விளைவே இதுவும் - வேள்வி (யாகம்), அடிமை முறை ஆகியவையுமாகும். பிறகு இது உலகம் முழுவதும் பரவிவிட்ட தொற்றாக ஆகிவிட்டது.
தடை செய்யவேண்டும் - தமிழ்நாடு அரசு
எப்படியிருந்தபோதிலும், ஆன்-லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்ய தமிழ்நாடு அரசு சற்றும் தாமதிக்காது அவசரச் சட்டம் மூலமாகக் கூட முயற்சி எடுப்பது அவசியம்!
மனித உயிர்கள் வெறும் இழப்பீடுகளால் அளக்கப்படக் கூடாது. மானமும், மரியாதையும், மனிதமும்கூட காப்பாற்றப்பட இத்தடுப்புச் சட்டம் மிகவும் அவசரமான தேவையாகும். மெத்தனம் காட்டக் கூடாது தமிழ்நாடு அரசு. இவ்வாறு கூறியுள்ளார்.