![with a government vehicle... Relatives blocked the road!](http://image.nakkheeran.in/cdn/farfuture/vhAs8km3OgiypiozmvaXuVlGUAVq5CGk195JsFBbL8s/1662462374/sites/default/files/inline-images/n1005.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகுரு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர் ராமு ஆகிய இருவரும் நாகுடியிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது எதிரே திருச்சி பூச்சியியல்துறை வல்லுநர் லதா மற்றும் துறை அலுவலர்கள் 5 பேர் அறந்தாங்கி, நாகுடி வழியாக மணமேல்குடி நோக்கிச் சென்றுள்ளனர். சுகாதாரத்துறைக்கு சொந்தமான காரை குளித்தலை சஞ்சீவி (50) என்பவர் ஓட்டியுள்ளார்.
நாகுடி கலக்குடி தோப்பு அருகே செல்லும் போது சுகாதாரத்துறை கார் நிலைதடுமாறி குறுக்கே பாய்ந்து எதிரே வந்த ராஜகுரு, ராமு ஆகியோர் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி போலீசார் சடலங்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தகவல் பரவிய நிலையில் விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் திரண்டு நாகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சஞ்சீவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.