சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே இலந்தைவாரியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அணைப்பட்டியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரும், பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரும் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் தலைமை ஆசிரியர், தலைவாசல் மும்முடியைச் சேர்ந்தவர். அந்த ஊரில் இருந்து பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால், தினமும் அவர், உடன் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியருடன் அவருடைய மோட்டார் சைக்கிளிலேயே பள்ளிக்குச் சென்று விடுவாராம்.
இதில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி அவர்கள் வகுப்பறையிலேயே தனிமையில் இருப்பதாக ஊர் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி, உள்பக்கமாக பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருந்துள்ளனர்.
இதை அறிந்த கிராம மக்கள், பெண் தலைமை ஆசிரியரின் கணவருக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர் பள்ளிக்கு வந்து, கதவைத் தட்டி கூச்சல் போட்டார். பெரும் விசுவரூபம் எடுத்த இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நேரில் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, பெண் தலைமை ஆசிரியரை வரகூர் அரசு தொடக்கப்பள்ளிக்கும், பகுதி நேர ஆசிரியரை திட்டச்சேரி பள்ளிக்கும் இடமாற்றம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் அசோகன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம், சேலம் மாவட்ட தொடக்கக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.