கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 632 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பத்தாம் வகுப்பில் 75 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பில் 104 மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 78 மாணவ, மாணவிகளும் மொத்தம் 257 பேர் அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
அரசு பள்ளி என்றாலே மாணவ, மாணவிகளுக்குச் சரியாகப் பாடம் நடத்தமாட்டார்கள் என்பதுதான் பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் 80 சதவிகிதம் பேர் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்பது கிடையாது என்ற குற்றச்சாட்டையும் மறுக்க முடியாது. இதனை அரசு பள்ளி ஆசிரியர்களும் ஏற்றுகொள்கிறார்கள்.
இந்த பள்ளியில் பயிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் அரசு பொது தேர்வு எழுதி வருகிறார்கள். இந்தநிலையில் மாணவர்கள் அனைவரும் கிராம புறங்களில் இருந்து வருவதால் அவர்களின் வீட்டு சூழல் அரசு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி படிக்கமுடியாத சூழல் இருக்கும் என கருதி இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கூட்டுமுயற்சியில் மாணவர்களுக்கு தேர்வு குறித்து தனி வகுப்பு நடத்துகின்றனர். அது மட்டும் இல்லாமல் வகுப்பு இடைவேலைகளில் மாணவர்களுக்கு சுண்டல் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இரவு 8 மணி வரை பள்ளியில் அமர்ந்து படிப்பதால் இரவு சாப்பாட்டையும் பள்ளியிலே வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
சிறப்பு வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் அனைத்து பாட ஆசிரியர்களும் மாணவர்களுடன் இருந்து மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாடம் குறித்த சந்தேகங்களைத் தலைமை விளக்கமளிக்கின்றனர்.
மேலும் மாணவ, மாணவிகள் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவதால் இரவு நேரத்தில் பேருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்பதால் ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியால் அவர்களின் நெருங்கிய நண்பர்களின் உதவியால் வாகனத்தை ஏற்பாடு செய்து அதில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் தேர்வு நேரத்தில் சிறப்பு வகுப்புகள், சிற்றுண்டி, இரவு உணவு, பாதுகாப்பான வாகன வசதி என அனைத்திற்கும் ஏற்பாடு செய்துள்ள பள்ளியின் ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதே போல் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் செய்தால் மாணவர்களின் வாழ்க்கை வெற்றியாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.