தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி கட்டிடங்கள் பல ஆண்டுகளாக முழுமையாக சேதமடைந்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் ஏராளமான அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியிலும் சமுதாயக்கூடங்களிலும் வகுப்புகள் நடப்பதை ஏற்கனவே நக்கீரன் பல முறை சுட்டிக்காட்டியது. பல பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்ததையும் கூறியிருந்தோம். அதன் பிறகும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தற்போது வரை மேற்கூரைகள் உடைவது வழக்கமாகவே உள்ளது.
நேற்று முன்தினம் விடுமுறை தினம் முடிந்து பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சி காரணம் வகுப்பறை மேற்கூரை உடைந்து கிடந்தது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் காயமின்றி தப்பினார்கள். ஒவ்வொரு நாளும் இப்படி பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கரோனாவுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் வகுப்பறைகள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வகுப்பறை கட்டிடங்கள் பல வருடங்களாக கட்டப்படாததால் இடநெருக்கடியில் படிக்கிறார்கள் மாணவர்கள்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 117 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஒரு பழைய ஓட்டு கட்டிடம் உடைந்து கொட்டிக் கொண்டிருப்பதை நக்கீரன் செய்தியில் படத்துடன் வெளிக்காட்டி இருந்தோம். அதன் பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்து ஒப்பந்தம் விடப்பட்டும் இடிக்கப்படவில்லை.
தற்போது மழை பெய்து வருவதால் இந்த கட்டிடம் இடிந்து கொட்டினால் அருகில் உள்ள வகுப்பறை கட்டிடமும் பாதிக்கப்படும் என்பதால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்கள் இணைந்து பள்ளி நுழைவாயிலில் நின்று ஆபத்தான உடைந்த கொட்டிக் கொண்டிருக்கும் பள்ளி மற்றும் சமையல் கூடங்களை இடித்து அகற்றும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பமாட்டோம் என்று மாணவ, மாணவிகளை மரத்தடி நிழலில் அமர வைத்திருந்தனர்.
இந்த தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் பெற்றோர்கள் மற்றும் ஒப்பந்தக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நாளை விடுமுறை நாள் என்பதால் கட்டிடங்களை இடித்து அகற்றுவதாக உறுதி அளித்ததால் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆபத்தான கட்டிடத்திற்கு அருகே உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்க கூடாது என்று தற்காலிகமாக மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டது.
கொத்தமங்கலம் பள்ளியில் பெற்றோர்கள் போராடியதால் ஆபத்தான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட உள்ளது.ஆனால் பெற்றோர்கள் போராடாமல் மனுக்கள் கொடுத்துவிட்டு பல வருடங்களாக ஆபத்தான நிலையில் காத்திருக்கும் கட்டிடங்களை எப்போது இடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மழைக்காலத்தில் கட்டிடங்கள் அதிகமாக இடிந்து கொட்டும் என்பதால் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் படிப்பார்கள் இல்லை என்றால் மரத்தடி, வராண்டா, சமுதாயக்கூடங்களில் தான் படிக்க வேண்டும். கல்வித்துறை தீவிர நடவடிக்கையிலேயே ஏழை மாணவர்களின் படிப்பும் பாதுகாப்பும் உள்ளது.