இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகத் தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
“திமுகவின் தொடர் வலியுறுத்தல்கள் மூலமாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது” என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் - அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே நாளிதழ் ஒன்றில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் இந்தியா ஏவுகணை முகப்பில் சீனாவின் தேசியக் கொடி இடம்பெற்றிருந்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசிய மோடி, “குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திறப்பு விழாவில் திமுக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில் சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதிலிருந்தே இவர்களின் நாட்டுப் பற்று நன்றாக தெரிகிறது” என்றார்.
இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இந்த விளம்பரத்தை செய்த நபர் எங்கிருந்து இந்தப் படத்தைக் கண்டுபிடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. சீனாவை இந்தியா எதிரி நாடாக அறிவிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். சீன பிரதமரை நம் பிரதமர் இந்தியா அழைத்ததையும், அவர்கள் மகாபலிபுரம் சென்றதையும் பார்த்திருக்கிறேன். உண்மையை ஏற்க விரும்பாத காரணத்தால் பிரச்சினையை திசைதிருப்ப காரணங்களை தேடுகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.