அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரம் அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அண்மையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவை மாவட்டம், பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களது தொகுதி சார்ந்த விஷயமாகத் தான் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தார்கள். அரசு நிகழ்வு என்பதால் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு சில எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டார்கள். கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டுக்களில் தமிழ் மொழி இல்லாதது குறித்து அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், எந்த ஊரில் வங்கி திறக்கப்பட்டாலும், அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமலும் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தலாம்” என்று கூறினார். அப்போது அவரிடம், உங்களை பொறுத்தவரை அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்று செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று பதிலளித்தவாறு அங்கிருந்து சென்றார்.