515 கணேசன் என்றால் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரைத் தெரியாத மக்களே இல்லை. எங்கே ஆதரவற்றவர்களின் சடலங்கள் கிடந்தாலும் அழையுங்க 515 கணேசனை என்பார்கள். பிரசவ வலி என்று கர்ப்பிணிகள் துடிக்கும் போது 515 கணேசன் தான் நினைவுக்கு வருவார். அத்தனையும் இலவசம். இந்த சேவை செய்ய அவர் ஒன்றும் கோடீஸ்வரன் இல்லை. தினமும் பழைய இரும்பு, பேப்பர் வாங்கி விற்கும் சாதாரண மனிதன் என்றாலும் அவருக்குள் உயர்ந்த உள்ளம் இருந்தது.
கடந்த 50 ஆண்டுகளில் 5154 சடலங்களையும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளையும் ஏற்றி இருக்கிறார். பல ஆயிரம் பேர் அவரது காரில் ஏறி பிழைத்திருக்கிறார்கள். பிணம் ஏற்றுகிறவர் என்று உறவுகள் ஒதுக்கிய போது கூட ஏழைகளுக்கான சேவையை நிறுத்தவில்லை.
ஊரெங்கும் சடலம் ஏற்றவும், கர்ப்பிணிகளை ஏற்றவும் ஆம்புலன்ஸ், கார்கள் வந்த பிறகும் கூட அவக்கு அழைப்புகள் உண்டு. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவைகள் வந்த பிறகு அழைப்புகள் குறைந்தது.
இத்தனை சேவைகள் செய்து வந்த கணேசனுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை. 5 பெண் குழந்தைகள். பெண் குழந்தைகளை படிக்கை வைத்து திருமணமும் செய்து கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனை வாங்கினார். பழைய இரும்பில் வாங்கிய தகரங்களைக் கொண்டு குடில் அமைத்து அவரும் அவர் மனைவியும் தங்கி இருந்தனர். அங்கேயே பழை இரும்பு, பேப்பர் வாங்கவும் செய்தார். அவரிடமும் சில காக்கிகள் திருட்டு பொருள் வாங்குவதாக சொல்ல மாதம் ரூ. 5 ஆயிரம் மாமூல் கேட்டதால் பழைய இரும்பு வியாபாரத்தையே விட்டார்.
இந்தியாவில் எங்கே புயல், வெள்ளம் பாதிப்பு என்றாலும் தனது காரில் சென்று ஊர் ஊராக நிதி திரட்டி நேரடியாக கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வந்தவருக்கு கஜா புயல் சோதனையை கொடுத்தது. பழைய தகரத்தால் அமைக்கப்பட்ட குடிலும் புயல் காற்றி பறந்து போனது. பல நாட்கள் வரை காருக்குள் தான் தங்கினார்கள். அவரிடம் இருந்த அத்தனை பொருட்களும் சேதமடைந்தது. ஊருக்கெல்லாம் உதவியவர் இருக்க இடமின்றி உடுத்த உடையின்றி தனித்து நின்றார். சில நாட்கள் அந்த கவலை.
சில நாட்களில் சுற்றிப் பார்த்தவருக்கு சொந்த மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்த்தும் தன்னை மறந்துவிட்டு புயல் பாதிக்காத மாவட்டம் நோக்கி புயல் நிவாரணம் சேகரிக்க கிளம்பினார்.
இப்படி ஒரு மக்கள் சேவகன் வீடு கூட இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் வேகமாக பரவியது.
அரசாங்கம் வீடு கொடுக்கும், உதவிகள் செய்யும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மக்கள் எதிர்பார்ப்பில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் தகவல் அறிந்து ஓடோடி வந்தார். அய்யாவுக்கு நான் வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்றார். சொன்னபடியே ரூ. 10 லட்சத்தில் அழகான வீட்டை கட்டினார் 4 மாதங்களின் வேலை முடிந்தது. மே 14 ந் தேதியான இன்று ராகவா லாரன்ஸ் ஆலங்குடி வந்து 515. கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மாலை மரியாதை எல்லாம் செய்து வீட்டு சாவியை கொடுத்து வீட்டை திறந்து வைத்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆலங்குடி மக்கள். இத்தனை சேவைகளை செய்த 515 கணேசனை கௌரவிக்க வேண்டிய அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. சேவை மனம் கொண்டவர்கள் உதவி வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இன்னும் வளரனும் அவரது வளர்ச்சி சேவைகயாக தொடரனும் என்று பாராட்டினார்கள்.