விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும்: திருநாவுக்கரசர்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதுடன், இவ்வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா பரவலாக புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகிற வகையில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் குட்கா, பான் மசாலாவை எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க. உறுப்பினர்களும் சபாநாயகரிடம் காட்டி தடை விதிக்கப்பட்டதாக கூறினீர்களே ? இப்போது பரவலாக கிடைக்கிறதே என்று முறையிட்டனர். மேலும் இதில் தமிழக அமைச்சர்கள் சிலரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். இது அவையின் உரிமையை மீறியதாக சபாநாயகர் தனபால் இப்பிரச்சினையை உரிமைக் குழுவிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
சமீபத்தில் உரிமைக்குழு கூடி குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டமன்றத்தில் காட்டிய எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உரிமைக்குழு கூட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை. உரிமைக்குழு என்பது ஆளுங்கட்சிக் குழுவாக மாறி, சட்டமன்ற உரிமைகளை பறிக்கிற வகையில் இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயகர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
சட்டமன்றத்திற்குள் நடைபெறும் ஜனநாயக ரீதியான நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அனைத்து உரிமைகளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு என்பதை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதன் மூலம் உறுதி செய்திருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயகம் காக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.