நெல்லை மாவட்டத்தின் நாங்குனேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு புகுந்து ஆடுகளைத் திருடிக் கொண்டு சென்று வயல் வெளிகளில் கறிவிருந்து நடத்துவதாக அரசல் புரசலாக தகவல் கிளம்பின. ஆனால் அவைகள் கண்டு கொள்ளப்படவில்லை.
நாங்குனேரி கிராமப் பகுதிகளின் ஆடுகளைக் குறிவைக்கும் கும்பல் ஒன்று பகலில் வீடுகளை நோட்டமிடுகின்றனர். இரவு நேரத்தில் அவைகளைத் திருடிக் கொண்டு சென்று, ஒதுக்குப்புற வயல் காடுகள், பம்புசெட்டுகள், பகுதிகளில் வெட்டிக் கிடாய் விருந்து படைக்கின்றனர். மது வகைகளை அருந்தி விட்டு ஆட்டம் பாட்டத்தோடு சமைக்கப்பட்டத் திருட்டு ஆடுகளின் கறியை வருவல்களை ஒரு கை பார்க்கின்றனர். இந்த சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் ஆடு வளர்ப்போர் சங்கத்தினர்.
இதனிடையே நாங்குனேரியை ஒட்டிய பட்டப்பிள்ளைப் புதூரைச் சேர்ந்த வானமாமலையின் வீட்டில் கட்டப்பட்டிருந்த மூன்று ஆடுகளை இரவோடிரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் அவைகளின் மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆடு திருடர்களைத் தேடி வருகின்றனர்.
இரவுநேர கிடாய் விருந்தை தடுக்க ஆடுகளைக் காப்பாற்ற இரவு நேரச் சோதனை கடுமையாக்கப்பட வேண்டும் என்கிறார்கள் நாங்குனேரி ஆடுகள் வளர்ப்பு சங்கத்தினர்.