நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேர் மீது கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி திருவேணி முன்னிலையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உட்பட 15 காவலர்கள் நேரில் ஆஜராகினர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் பல்வீர் சிங் தரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி குற்றவியல் நீதிபதி திரிவேணி உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டுள்ளது.