
தலைவாசல் அருகே, பிளஸ்2 மாணவியை காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த தச்சு தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரோஜா (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். அந்தச் சிறுமி தினமும் பள்ளிக்குச் செல்லும்போது நத்தக்கரை வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி அருள்குமார் (26) என்பவர் பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஏப். 5ம் தேதி, சிறுமியின் வீடு அருகே காரில் வந்து இறங்கிய அருள்குமார், அவரிடம் மீண்டும் தனது காதலை தெரிவித்ததோடு, ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு ரோஜா எந்த பதிலும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று அவரை காரில் கடத்திச் சென்று விட்டார். சில மணி நேரம் கழித்து, ரோஜாவை அவருடைய வீடு அருகே கொண்டு வந்து இறக்கிவிட்டுச் தப்பிச்சென்று விட்டார்.
சிறுமியிடம் அவருடைய பெற்றோர் விசாரித்தபோது, அருள்குமார் காரில் கடத்திச்சென்று, காருக்குள் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கதறிபடியே கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில்குமார், சிறுமியை கடத்திச்சென்று வன்கொடுமை செய்த அருள்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். உள்ளூரில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த அருள்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறுமியியை கடத்திச்சென்ற அவரை காவல்துறையினர் தங்கள் 'பாணியில்' விசாரித்தனர். அருள்குமார், சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததும், காதலுக்கு சிறுமி பச்சைக்கொடி காட்டாததால் அவரை வன்கொடுமை செய்து விட்டால், தனக்கே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்று கருதியும் அவரை கடத்திச்சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் அருள்குமாரை ஆத்தூர் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.