ஈரோடு மாவட்டம் கடத்தூர், ராக்கன கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் கோபிசெட்டிபாளையம் பெரிய மொடச்சூர், அண்ணா நகரை சேர்ந்த சமுத்ரா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. லட்சுமணன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராக பணிபுரிந்து வந்தார். மற்ற நேரங்களில் நடு பாளையத்தில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சமுத்ரா தானும் வேலைக்கு செல்வதாக கடந்த சில மாதங்களாகக் கணவரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் லட்சுமணன் மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டாரும் கணவன் - மனைவியைச் சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று(2.9.2024) காலை சமுத்ரா தனது தாயிடம் போன் செய்து எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை நானே பேசி தீர்த்துக் கொள்கிறேன் என்று கூறி போனை வைத்து விட்டார்.
இந்நிலையில் மாலை வீட்டிலிருந்த சமுத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சமுத்ரா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.